உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய காரை இயக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில்,அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், உ.பி. மாநிலம் லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட வழக்கில், முக்கியக் குற்றவாளியான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது வன்முறை குறித்த கேள்விகளுக்கு ஆஷிஷ் மிஸ்ரா பதிலளிக்கவில்லை என்பதாலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாலும் கைது செய்துள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், ஆஷிஷ் மிஸ்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லக்கிம்பூர் வன்முறை வழக்கில் உத்தரப் பிரதேச காவல் துறையால் அமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜரானார். டிஐஜி உபேந்திர அகர்வால் தலைமையிலான 6 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு சனிக்கிழமை மாலை வரை ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.