இந்தியாவில் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய யுபிஐ ஏடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
முன்னதாக மும்பையில் நடந்த சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் தான் இந்த புதிய ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதனை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில், வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.எந்திரத்தில் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பியூஷ் கோயல், “யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் இங்கே தான் இருக்கிறது!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, பல வங்கிகள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்கி வரும் நிலையில், அதே போல வசதியைத்தான் இந்த யுபிஐ-ஏடிஎம் வழங்குகிறது.
பிற வங்கிகள் அனைத்தும் மொபைல் மற்றும் ஓடிபி-ஐ அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், யுபிஐ-ஏடிஎம் எந்திரமானது, க்யூஆர் கோட் மற்றும் யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் எடுப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய யுபிஐ ஏடிஎம்-கள் மக்கள் பயன்பாட்டிற்காக பொது இடங்களில் வைக்கப்பட்ட பின்னர், பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஏடிஎம்களுக்கு எடுத்துச் செல்வது குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த யுபிஐ-ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பது எப்படி என இங்கு பார்க்கலாம்.
1) முதலில், ஏடிஎம்-ல் இருந்து எடுக்க விரும்பும் தொகையை தேர்ந்தெடுத்து குறிப்பிட அதனை கிளிக் செய்ய வேண்டும்.
2) பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்த தொகைக்கான க்யூஆர் குறியீடு (QR code) திரையில் தெரியும்.
3) அப்போது மொபைல் போனில் உள்ள உங்கள் யுபிஐ (UPI) செயலியை பயன்படுத்தி அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
4) அதன் பின்னர் பணப் பரிவர்த்தனையை அங்கீகரிக்க மொபைலில் உங்கள் யுபிஐ பின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
5) யுபிஐ பின் எண் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது மத்திய மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள இந்த புதிய யுபிஐ ஏடிஎம் வீடியோ வைரலாகி வருகிறது.