கேரளா சினிமாவில் பாலியல் தொல்லைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக நடிகைகள் கூறி நிலையில், அதனை தவிர்க்க நடிகைகளுக்கு மூத்த நடிகை ஊர்வசி சில டிப்ஸ்களை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது..
“பாலியல் தொல்லை என்பது நடிகைகளுக்கு இப்போது வந்தது அல்ல. நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பில் இருந்தே இது போன்ற பிரச்சனைகளை சில நடிகைகள் அனுபவித்துள்ளனர். அது பற்றி என்னிடமும் பகிர்ந்துள்ளனர்.
அந்த காலகட்டத்தில், இந்த விவகாரம் பற்றி நடிகைகள் பெரிதாக வெளியில் பேசிக் கொள்வது இல்லை.
ஆனால்,இப்போது திரைத்துறையில் உள்ள பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதனை நடிகைகள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நபர்களை தண்டிக்க நல்ல வாய்ப்பாக அமைத்துள்ளது.
இதையும் படிங்க : நாளை 10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு!!
கேரள திரையுலகில் மட்டுமே இது போல் நடக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளன. இது போன்ற பிரச்சனைகளை நடிகைகள் எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், படம் பற்றி பேசுவதாக இருந்தால், ஹோட்டல், ரெஸ்ட்டாரெண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் பேசலாம்.
ஆனால் தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கு வர சொன்னால் அது போன்ற சந்திப்புகளை தவிர்க்க வேண்டும். இதை ஒரு விதிமுறையாகவே சினிமா துறை சார்ந்த சங்கங்கள் கொண்டுவர வேண்டும்.
அதையும் மீறி சிலர் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்திக்கொண்டால், அதற்கும் சங்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கூற வேண்டும். அப்போதுதான் பலர் தனியாக யாரையும் சந்திக்க மாட்டார்கள். இதுபோன்ற பாலியல் சர்ச்சைகளும் குறையும்.
ஒரு பெண்ணை பார்க்கும் போது ஆண்களுக்கு விருப்பம் ஏற்படுத்துவது உண்டு. இதை சிலர் வெளிப்படையாக கூறலாம். இதெல்லாம் பாலியல் சீண்டல் என கூறமுடியாது. ஒரு பெண்ணின் தொழிலையே முடக்கும் அளவுக்கு அவளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தாலோ… விருப்பம் இல்லாமல் உடல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாலோ அது தான் பாலியல் தொந்தரவு” என்று கூறியுள்ளார்.