அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாம் நலமுடன் இருப்பதாக ஒபாமா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளில் பரவி பல்வேறு பாதிப்புக்களை ஏற்ட்படுத்திக் கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
2109-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களுடன் உலக நாடுகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் தடுக்கவும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொண்டன. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை மொத்தம் 60,66,173 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம் என்றும் தெரிவித்தார். மேலும் தனது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது என்றும் தொற்றுகள் குறைந்தாலும் கூட நீங்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.