பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், பயணத்தைத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே 2 முறை விபத்துக்குளாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியாவின் மூன்றாவது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார். மும்பை முதல் குஜராத்தின் காந்திநகர் வரை செல்லும் இந்த ரயில் முதல் நாள் செல்லும்போதே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாடுகள் மேல் முட்டி விபத்துக்குள்ளானது.
விபத்தில், ரயிலின் என்ஜின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. அதை மட்டும் தற்காலிகமாக சரி செய்து ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்திய மாடுகளின் உரிமையாளர்கள் மீது மேற்கு ரயில்வே வழக்கு பதிவு செய்தது.
பின்னர் மும்பை சென்ட்ரலில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு இரவு முழுவதும் பழுது நீக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் நேற்று இயக்கப்பட்டது.
நேற்றைய பயணத்தின் போதும், குஜராத்தின் கஞ்சாரி மற்றும் ஆனந்த் நிலையங்களுக்கு இடையில் பசு மாடு மோதி ரயில் மீண்டும் விபத்துக்குள்ளானது. மும்பையில் இருந்து 432 கிமீ தொலைவில் உள்ள ஆனந்த் அருகே வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பசுமாடு மோதி மீண்டும் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ரயிலின் என்ஜின் மற்றும் மற்ற பாகங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு இரண்டு சம்பவத்திலும் எந்த பயணிக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஆரம்பித்த சில நாட்களிலேயே வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாவது, அதிலும் மாடுகள் மோதி ரயிலின் முன்பகுதி சேதம் அடைவது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ‘தண்டவாளத்தில் கால் நடைகள் மீது ரயில் மோதுவதை தவிர்க்க இயலாது. இதை மனதில் கொண்டே ‘வந்தே பாரத்’ ரயில்கள் வடிவமைக்கப்பட்டன. விபத்து நடக்கும் போது முன்பகுதி மட்டும் சேதமடையும். அது மாற்றக்கூடியது தான்’ என்று கூறியுள்ளார்.
இதில் சில கவனிக்கப்படவேண்டிய விஷயங்களை அரசு எடுத்துக்கொண்டுள்ளதா என தெரியவில்லை. அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தவேண்டும். உதாரணத்திற்கு சென்னை, டெல்லி, பெங்களூரு மெட்ரோ ரயில்களுக்கென தனி தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, கால்நடைகளோ அல்லது பயணிகளோ தண்டவாளங்களில் இறங்கமுடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது நகரங்களுக்குள் ஓடுவதால் அத்தகைய முறையை நெடுந்தூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு பயன்படுத்துவது சாத்தியமானதாக இருக்காது என கருதலாம்.. ஆனால் கால்நடைகளோ அல்லது பயணிகளோ தண்டவாளங்களில் கடப்பதை தவிர்ப்பதற்கான நடைமுறை சாத்தியகூறுகளை உருவாக்கினால் இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.