விதிகளை மீறி அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று தமிழகத்தில் இயங்கி வருவதாகவும், ஆண்டுக்கு 20 இலட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
சென்னை வேளச்சேரி அருகே அமெரிக்க தூதரகத்தின் மேற்பார்வையில் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி அமைந்திருக்கும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமான இடமாக இருக்கும் அந்த இடம், சுமார் 12 ஏக்கர் பரப்பளவுடையது எனவும், அந்த இடத்தின் மதிப்பு தோராயமாக 800 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த இடத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் மட்டுமே மாத வாடகையாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இது தமிழக மக்களை சுரண்டும் முயற்சி எனவும் வசீகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read : பொற்பனைக்கோட்டை அகழாய்வு – பழங்கால எலும்பு முனைக் கருவி கண்டெடுப்பு..!!
தமிழகத்தின் மற்ற தனியார் பள்ளிகள் அவர்கள் சொந்த இடத்தில் பள்ளிகள் அமைத்திருக்கும் போதிலும் தமிழக அரசு விதித்திருக்கும் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன. ஆனால் இந்த அமெரிக்கன் பள்ளியில் கட்டணம் தொடங்கி RTE எனப்படும் கல்விக்கான உரிமைச் சட்டம் வரை அரசு விதிகளை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இந்த பள்ளி இருப்பதால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக உண்மைகள் அறியவும் இயலவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே இது தொடர்பான புகார்கள் எழுப்பப்படுவதாகக் குறிப்பிட்ட வசீகரன்,
அதிமுக , திமுக என இரு அரசுகளும் இந்தப் பள்ளி குறித்த புகார்களில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறியிருக்கிறார்.
அதிமுக ஆட்சியின்போது, PTR பழனிவேல் தியாகராஜனின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படித்த போது அதிக கட்டண வசூல் பற்றி அவரே குற்றம் சாட்டியதாகவும் ஆனால் தற்போது திமுக மௌனமாக இருப்பதாகவும் வசீகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சாமானிய மக்களுக்கோ அரசுக்கோ பயன் தராமல் அரசு இடத்தில் இந்தப் பள்ளி செயல்படவேண்டியதன் கட்டாயம் என்ன? மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பும் வசீகரன், இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் முயற்சிகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.