vck manifesto– மக்களவைத் தேர்தலையொட்டி விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார்.
அதில், “பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இண்டியா கூட்டணியின் முதல் புள்ளியை தொடங்கியவர் ஸ்டாலின். தமிழ்நாட்டுடன் தேர்தலை சுருக்காமல் இந்திய அளவில் தேர்தல் களத்தை விரிவாக்கினார்.” என்று கூறப்பட்டிருந்தது.
ஏன் பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும்?
புத்தர் காலத்தில் தொடங்கிய சமூக சனநாயகப் போராட்டம் நீண்ட நெடுங்காலம் நடந்து ஓர் அரசியல் பரிணாமத்தைப் பெற்றது சுதந்திர இந்தியக் குடியரசு அறிவிக்கப்பட்டபோதுதான். பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் புரட்சியாளர் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தினால் இந்தியா சனநாயக நாடாகக் கட்டமைக்கப்பட்டது.
சமூக சனநாயகம் என்கின்ற கோட்பாட்டை துளியும் அறியாத இந்திய சமூகத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் சமநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கோட்பாட்டை முன்னிறுத்தி சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி அடிப்படையில் இந்திய சனநாயகத்தைக் கட்டமைத்தது. அவை தொடர்ந்து இந்திய சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கி ஒரு பண்பாடாகப் பரிணமித்து வருகிறது.
உயிர்ப்புமிக்க இந்தப் பரிணாமத்தை வளரவிடக்கூடாது என்று 2000 ஆண்டு காலமாக எந்தச் சக்திகள் போராடினவோ, முட்டுக்கட்டைகளைப் போட்டனவோ அதே சக்திகள்தான் புரட்சியாளர் அம்பேத்கர் காலத்திலும் தொடர்ந்து முட்டுக்
கட்டைகளைப் போட்டன.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு..!!!
இன்றும் அவற்றின் கொடூரக் கைகள் நீண்டுகொண்டிருக்கின்றன. இந்து என்கின்ற பொய் முகத்தைத் தாங்கிய இந்துத்துவம்
என்கின்ற பாசிச சனாதனக் கருத்தியலை நிலைநிறுத்தத் துடிக்கும் போலி இந்துகள் செயல்படும் விதங்களை இந்த நாடு அறியும். இந்துகளுக்காக இந்துவாகப் போராடிய காந்தியடிகளைக்கூட இந்த இந்துத்துவ சக்திகள் துள்ளத்துடிக்கக் கொன்றழித்தார்களே எதற்காக?. தங்களது போலி இந்து முகத்தை இந்துத்துவம்எனும் பாசிசக் கொள்கையை நிலைநிறுத்தத்தானே!
தங்களின் அரசியல் மற்றும் சமூக சுயநலத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் இந்த பாசிச சக்திகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வீழ்த்திவிட்டு ஏற்றத்தாழ்வுகளைப் புனிதப்படுத்தும் சனாதனப் பயங்கரவாதத்தை அரசமைப்புச்சட்டமாக மாற்றத் துடிக்கின்றார்கள். அதற்கான முன்வரைவு ஒன்றை ஏற்கனவே காசியில் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பிற்போக்குத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக பா.ஜ.க விளங்குகின்றது.
அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தலைவர்கள்கூட இதுகுறித்துப் பேசி வருகின்றார்கள். அவர்களின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அரசமைப்புச்சட்டத்தில் இருக்கும் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய வார்த்தைகள் நீக்கவேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். எனவே, புரட்சியாளர் அம்பேத்கரும் அறிஞர் பெருமக்களும் உருவாக்கிய இந்த மாபெரும் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்த சனநாயக அரசைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதனால், பா.ஜ.க வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.
செயல்திட்டம்
பாசிச பா.ச.க.வை வீழ்த்தி சனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ‘இந்தியா கூட்டணி’யின் நோக்கமாக இருக்கின்றது. எனவே, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. அந்த அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் வாக்குறுதியாக ஒரு செயல்திட்டத்தை முன்வைக்கின்றது. அதில் ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
- அரசமைப்புச்சட்டப் பாதுகாப்பையும் மக்களாட்சியையும் உறுதி செய்வது.
- சமநீதி, சமூகநீதி, அரசியல்நீதி, பொருளாதாரநீதி ஆகியவற்றை உறுதிசெய்வது.
- தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர், பாலினச் சிறுபான்மையினர், நாடோடிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவரவர்களுக்கான உரிமைகளையும் நலன்களையும் உறுதிசெய்தல்.
- தொழில்வளத்தை மேம்படுத்துதல், பெருமுதலாளிகளிடமிருந்து சிறுதொழில் முனைவோர்களைப் பாதுகாத்தல், இணையப் பயன்பாட்டு வணிகத்தில் சமநிலையை உருவாக்கி இளைய சமுதாயம் பொருளாதார வளம் பெறுதல்.
- இளைஞர்கள், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், வேளாண் குடிகளுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றாமல் உற்பத்தியை ஊக்குவித்தல்.
மேற்கண்ட கூறுகளின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வாக்குறுதிகளை முன்வைக்கின்றது. - கூட்டணிக் கட்சியில் இடம்பெறுகின்ற கட்சியாக இருப்பதினால் எங்களது வாக்குறுதிகள் ‘இந்தியா கூட்டணி’ ஆட்சி அமைக்கின்ற பொழுது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம்பெறவைப்போம்; நாடாளுமன்றத்தில் ஆலோசனைகளாகவும் மசோதாக்களாகவும் நிறைவேற்ற முயல்வோம் என்கின்ற வாக்குறுதியை அளிக்கின்றோம்.
- நாட்டின் அரசியல் அதிகாரத்தில் அமருகின்றபோது இவற்றை முழுமையாகச் செயல்படுத்துவோம். அதற்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறோம்.