நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்பியதாக சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவி வந்த நிலையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகள் பரப்ப வேண்டாம் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.