சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பாதிப்பை உணர்ந்து, மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்தல், மின்சார நிலை கட்டண உயர்வை திரும்பப்பெறுதல், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட பல நகரங்களில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழக அரசுக்கு ரூ. 2500 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
1 கிலோ வாட் மின்சாரத்திற்கு நிலை கட்டணம் ரூ.35 லிருந்து ரூ. 153-ஆகவும், அதிக பயன்பாடு நேரமான காலை 6 மணி முதல் 10 மணி வரை 15%, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 20% மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிறு குறு தொழில் நிறுவனங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசும், முதல்வர் திரு. முக ஸ்டாலினும் செவிசாய்க்கவில்லை. மின்கட்டண உயர்வினால் சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களின்: வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பரவல், அதை தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை ஏற்றம் ஏற்படுத்திய தாக்கத்தால் தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பாதிப்பை உணர்ந்து, மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.