கிராம நிர்வாக அலுவலரை பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது எனக் கூறி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வாலிபர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கடலூர் வட்ட அளவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடலூர் அடுத்த வரக்கால்பட்டு, காராமணிகுப்பம் ஆகிய 2 கிராமத்திற்கும் சேர்த்து கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வந்தவர் பாலமுருகன், இவர் அப்பகுதியில் வசிக்கும் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 230 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கி உள்ளார்.
மேலும், 161 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் வரை அவரை இட மாறுதல் செய்யக்கூடாது என்ற கோரிக்கை மனுவினை அப்பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர். கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்போது அவர்களுடன் வந்த வரக்கால்பட்டு அருந்ததியர் நகரை சேர்ந்த ராஜா என்பவர் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அருகில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.
மேலும், சம்பவம் அறிந்து வந்த புதுநகர் காவல் துறையினரிடம் தற்கொலைக்கு முயன்ற நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.