விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் (illict liquor) குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 88 பேரில் 66 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம், 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருவாரூர் மாவட்டத்தில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது மட்டுமல்லாமல், வெளி மாநில மதுபாட்டில்களையும் விற்பனை செய்த 44 பேரை காவல்துறையினர் ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் மற்றும் 450 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, டிஜிபி சைலேந்திர பாபு தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்க சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
முக்கியமாக, வனப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், கள்ளச் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருளான மெத்தனால் கள்ளத்தனமாக விற்கப்படுகிறதா என்றும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.