அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் திட்டத்தை கொண்டு வந்ததால் பாராம்பரியமாக அர்ச்சகர்களாக இருக்கும் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அர்ச்சகர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழக அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரபு மற்றும் ஜெயபால் ஆகியோர் புதிய அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலில் ஏற்கனவே பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவர்கள் கோயில் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிரபுவையும் ஜெயபாலையும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் விளைவாக அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை அடுத்து, கோயிலின் முக்கிய சன்னதியில் இருவரும் பூஜைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அப்பகுதியில் பாஜக, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் புதிய அர்ச்சகர்கள் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் போலீசார் சமாதானம் செய்த நிலையில், கோயிலில் பாரம்பரியமாக பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள் கோயில் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சகர் ஒருவர் பேசும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அதில், “தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லி, 2 நபர்களை நியமித்து இருப்பதால் இந்த கோயில் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதி சைவ சிவாச்சாரியார்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு உங்கள் மூலமாகவே தீர்வு கிடைக்க வேண்டும்.”என பேசியவர் திடீரென உணர்ச்சிவயப்பட்டு அழுதபடி, “இப்போ நாங்கள் நடுத்தெவுல நிற்கிறோம் முருகா! நீ இருந்தால் கேளு முருகா! உன்ன நம்பிதான் இந்த 5 பேரும் இருக்கோம். எங்க குடும்பமே 4 நாளா இங்கதான் இருக்கிறது. எங்கள் குடும்பத்தை கெடுத்து இவங்க எல்லாம் நல்லா இருக்க போறாங்களா?
இந்த நாடு நாசமாதான் போகப்போவுது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! முருகன் இருக்கிற வரைக்கும், இந்த நாடு இருக்கிற வரைக்கும் இவங்க எங்களுக்கு செஞ்ச அக்கிரமத்துக்கு அனுபவிச்சுதான் சாவாங்க! எவனுக்கும் நான் பயப்புட மாட்டேன். நான் சாகுறத பத்த கவலைப்பட மாட்டேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.” என பேட்டியில் கூறினார்.