ஐ தமிழ்த் தாய் நேயர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத, 105 அடி உயரத்தில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
அனுதினமும் ஸ்ரீ ஆஞ்சநேயரைப் போற்றும், உபாசகரின் கனவில் தோன்றி, அவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும்.
ஆண்டுதோறும் விஜயதசமியன்று, அருகில் உத்ரவாஹணியாக வடக்கு நோக்கிப் பாயும் காவிரி நதியிலிருந்து, பால்குடம் ஏந்திவரும் பக்தர்கள், தங்கள் இத்தலத்திலுள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யலாம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருத்தலம், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே, சிவராமபுரத்தில் அமைந்திருக்கிறது.
சிவனும்,இராமனும், ‘சிவராமபுரம்’ என்ற இவ்வூர் பெயரில் உள்ளதால், இருவரையும் ஒரே சிலையில் வடிவமைத்து பிரமாண்ட கோயிலும் அமைத்து வருகிறார்கள்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் தலத்திற்கு, உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
வாயிலில்,நாகர்களுடன் இணைந்திருக்கும் விநாயகரைத் தரிசித்து உள்ளே சென்றால், சற்று உயரமான மாடக்கோயிலில் ஸ்ரீ சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலைச் சுற்றி
ஸ்ரீ தத்தாத்ரேயர்
ஸ்ரீ ராதாகிருஷ்ணர்
ஸ்ரீ ராகவேந்திரர்
ஸ்ரீ தன்வந்திரி
ஸ்ரீ ஆதிசங்கர்
ஸ்ரீ வியாக்கிரதர்
ஸ்ரீ லட்சுமி ஐயக்கிரீவர் ஸ்ரீராமானுஜர்
ஸ்ரீ வள்ளலார்
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஸ்ரீ அகத்தியர் ஆகியோர் அழகுற அமைந்துள்ளனர்.
அதனை அடுத்து ஸ்ரீ செல்வக்காளியம்மன் தனி சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறாள். பக்கத்தில் ‘நம்பிக்கை, பெருமை, விடாமுயற்சி’ என்ற வாசகங்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ குருஸ்தலம் எதிரில், நந்தி,பலிபீடத்துடன் சிவபெருமான் தனி சந்நதியில் வீற்றிருக்கிறார்.
குபேரலட்சுமி, ஐஸ்வர்யா, கணபதி ஆகியோர் அம்சமாக அமைந்திருக்க, இடது பக்கம் நரசிம்மரும், வலது பக்கம் கருடரும், பின்பக்கம் வராகரும், புடைசூழ, ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் எல்லா நலன்களை அருளும் தெய்வமாகக் காட்சி தருகிறார்.
கும்பகோணம் – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் செல்லும், எவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம், 105 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் உயர்ந்து நின்று பெருமை சேர்க்கிறார்.
இக்கோயில் ஸ்தாபகரான ஸ்ரீமத்வாயு சித்தராமானுஜதாச ஜீயர் சுவாமிகள் சொல்வதைக் கேட்கலாம்.
“மன்னார்குடி ராஜகோபாலசாமி ஜயரிடம் தீட்சை வாங்கிய நாம், ஆஞ்சநேயர் உபாசகராக இருந்து வந்தோம். காவிரி வடக்கு நோக்கிப் பாயும் சக்தி பீடமான, இந்த இடத்தில் கோயில் அமைக்கும்படி ஆஞ்சநேயர் இட்ட உத்தரவின்படி, கடந்த 2004 – ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலம் வாங்கினோம். அதில் 2009 -ல் சிறிய கோயிலாக எழுப்பினோம். 2013 -ல் விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுப்பப்பட்டது.
அதன்பின் 2015 -ல் ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலும், செல்வ காளியம்மன் கோயிலும் அமைக்கப்பட்டது. இவை யாவுமே ஆஞ்சநேயர் உத்தரவுபடியும், அவர் அருளாலும், இத்தலத்தைத் தேடி வந்து கைங்கர்யம் செய்யும் பக்தர்களாலும் நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் விஜயதசமி அன்று வட காவிரி நதியிலிருந்து, 504 பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து சீரடி சாய்பாபாவுக்கு அவர்களது கரங்களாலேயே, அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தைத் தரிசித்து மூலிகை மருந்து சாப்பிட்டு ஆயிரக்கணக்கானோர் பலன் பெற்றுள்ளனர்.
அதுபோல் வியாழக்கிழமை தோறும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகின்றன. எங்கள் டிரஸ்ட் மூலம் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் கிராமங்களில், சிதலமடைந்துள்ள கோயில்களை புதுப்பித்தும், புதிய கோயில்களை கட்டியும் தருகிறோம்.
இதுவரை 150 கிராமங்களில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால், அவர்களின் பிரார்த்தனைகள் எதுவானாலும் அவை விரைவில் நிறைவேறும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிற விஷயமாகும்” என்றார்
ஆரம்பகாலம் முதல், இக்கோயிலைத் தரிசித்து வரும் பக்தரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான
மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம்.
“எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்கு இந்த ஆஞ்சநேயர்தான் கண்கண்ட தெய்வம். அவர்கள் விரும்பிய படிப்பு கிடைத்தது. டாக்டர் ஆனார்கள். மனம்போல் வரம் கிடைத்து திருமணம் செய்து தந்துள்ளேன். எனது குடும்பம் மனநிறைவோடு இருக்கக் காரணம் இந்த ஆஞ்சநேயர் அனுக்கிரகம்தான்.
என்னைபோல் பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து தரிசித்து வளம்பெற வேண்டும்”என்றார்.
மீண்டும் ஓர் பிரமிப்பான தலத்தை தரிசிக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது
ஐ தமிழ்த் தாய் !