சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் கட்சியினரிடையே கடும் மோதலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் சமூகத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆற்காடு சாலையில் உள்ள சரவணபவன் எதிரே சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அதிலிருந்து 50 பேரை மட்டும் போலீசார் குண்டு கட்டாக்க தூக்கி பேருந்தில் ஏற்றி கைது செய்தனர்.
மேலும் காவல்துறையினர் அங்கு குறைவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை தாக்க கையில் கம்பு மற்றும் கற்களை தூக்கிக்கொண்டு சென்ற பொழுது நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியே வந்த கட்சியின் தொண்டர்களும் இவர்களும் நேருக்கு நேர் கற்களையும் கட்டைகளும் விசி சரமாறியாக அடித்துக் கொண்டனர்.
குறிப்பாக இதில் ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர், அவரை எந்தப் பக்கமும் செல்ல முடியாத படி தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சியினர் கையில் கிடைத்தவைகளை எல்லாம் வைத்து சரமாரியாக தாக்கியதில் அவர் சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே கிடந்தார், பின்பு போலீசார் அவரை தூக்கி விட்ட உடன் அவர் அங்கே இருந்து ஓடிவிட்டார்.
மேலும் தெருவில் கிடந்த கற்களையும் கட்டைகளையும் கையில் எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் ஆதி தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை தாக்க முயன்ற பொழுது ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஆற்காடு சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர் மேலும் காவல்துறையினர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை சமாதானப்படுத்தி கட்சி அலுவலகம் உள்ளே செல்ல வைத்தனர்.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மறுபுறம் போலீசார் கைது செய்த கொண்டிருந்த பொழுது காவலர் இருவர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருடன் சாலையில் உருண்டு பிரண்டு கழுத்தை நெருக்கியபடி கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றார்.போராட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் இல்லாததால் இருவரும் மாறி மாறி தங்களை தாக்கிக் கொண்டனர்.
மேலும் இதில் பலத்த காயமடைந்த ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் உள்ளிட்ட 5 பேர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதைப்போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்து சென்னை போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.
போராட்டம் நடத்தப் போவதாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆற்காடு சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்துவதற்கு முன்பே கிழித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் காளிமுத்து என்பவரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து சென்று கட்சி அலுவலகத்தில் வைத்திருந்த நிலையில் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக அங்கே சென்று மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் அலுவலகம் வரை வந்து கல் விசயதாலும் உரிய முறையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்காததாலும் மோதலுக்கு தொடர்புடைய பொறுப்பாளர்கள் மீதும், மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மிதும் நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எஸ் ஆர் எம் சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளை சேர்ந்த நபர்கள் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.