திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அருமையான கூட்டணி, வலுவான கூட்டணி, வெல்லப்போகும் கூட்டணி, வெற்றி கூட்டணி அமையும். கூட்டணி யாருடன் என்பதற்கான முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்து சரியாக காய் நகர்த்தி கொண்டு சென்று இருக்கிறார்.
அடுத்து ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடுவார்கள் என உதயநிதி கூறுகிறார். ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. போராளிகளை பார்த்து படித்து போராளிகளுடன் இயக்கம் நடத்துபவர்கள் நாங்கள். 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக வந்த பிறகு தற்போதைய ஆட்சியால் கஷ்டப்படும் மக்களுக்கு சுபிக்ஷம் தரும் வழியை அவர் எடுப்பார்.
மக்கள் சிரமப்படாத வகையில் அனைத்து உதவிகளும் அதிமுக ஆட்சியில் செய்யப்படும். தற்போதைய ஆட்சியில் மின்சார துண்டிப்பு, மருத்துவர் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அதிருப்திகள் மக்கள் மத்தியில் உள்ளது.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே குற்ற செயல்களை தடுக்க முடியும். அதிமுக ஆட்சியில் காவல்துறை ஸ்காட்லாந்து நாட்டின் காவல் துறையினருக்கு இணையாக செயல்பட்டனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அருமையான,அற்புதமான ஆட்சி அனைவரும் மதிக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய ஆட்சி ஏற்படுத்தப்படும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.