காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்றால் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மகன்கள் என்ன செய்கின்றனர் என்று ராகுல் காந்தி (rahul gandhi) கேள்வியெழுப்பி உள்ளார்.
மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மிசோரத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி..
இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை போன்று மிசோரத்தில் நேற்று நான் நடைபயணம் சென்றபோது கிடைத்தது. மிசோரம் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது எம்.பி பதவி பாஜகவால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயல்கிறது. அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும்; மக்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வை.
ஆனால் வட கிழக்கு மக்களின் மத நம்பிக்கைகள் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல்களை நடத்துகின்றன. இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் மட்டுமே; ஒரு குறிப்பிட்ட அமைப்பால் மட்டுமே ஆளப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கை. இதைத்தான் நாம் எதிர்க்கிறோம். டெல்லியால் மிசோரம் ஆளப்படக்கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித் ஷா மகன் என்ன செய்கிறார். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.