இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், அந்த அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்களை இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ள்ளியுள்ளது திமுக அரசு என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்திய வானிலை மையம் தனது 14-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டின் மூன்றாவது பக்கத்தில் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் தென் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என்று ஏற்கெனவே கணித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 16-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டின் முதல் பக்கத்தில் தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 16 முதல் 18 தேதி வரை ஆங்காங்கே கனமழை பெய்யும் என்றும், டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவித்திருந்தது. 17-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டில் இதனை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டிருந்தது.
இதையெல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், 17-12-2023 தேதியிட்ட இந்திய வானிலை மையத்தின் செய்திக் குறிப்பை பட்டும் மேற்கோள்காட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 17-12-2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியிருந்தது தி.மு.க. அரசின் திறமையின்மைக்கும், அக்கறையின்மைக்கும், மெத்தனப்போக்கிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அதாவது, மழை பெய்யத் துவங்கிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்! இயற்கையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும் என்பதையும், அடிக்கடி மாறக்கூடியது என்பதையும் புரிந்து கொள்ளாமல், இந்திய வானிலை மையத்தின்மீது பழி சமந்தியுள்ளது அறியாமையின் உச்சகட்டம்.
14-12-2023 Breளய இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கமாட்டார்கள். தி.மு.க. அரசின் காலந்தாழ்ந்த நடவடிக்கை காரணமாக, மீட்டப் பணிகளையே மேற்கொள்ள முடியாத அளவுக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தள்ளப்பட்டார்கள். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு உணவுப் பொருட்கள்கூட வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. பின்னர் மழை ஓரளவுக்கு நின்ற பிறகு, பயணிகள் பல கிலோ மீட்டர் நடந்து சென்ற நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அவர்களுக்கு உணவு அளித்துள்ளனர்.
மழை நின்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்றடையவில்லை. நிவாரணப் பொருட்களை அளிக்க வலியுறுத்தி திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
பெரும்பாலான பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுதான் நிலைமை மக்கள் பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை என்றும், சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டிய முதலமைச்சர் கூட்டணி பேரம் குறித்து டெல்லி சென்றது. வேதனையிலும் வேதனை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. இது திமு.க. அரசின் திறமையின்மை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மிக்ஜும் புயலின்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் அதிகனமழை, அதாவது 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்த நிலையில், 51 செ.மீட்டர் மழை பெய்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையிலும், 14-12-2023 நாளிட்ட இந்திய வானிலை மையத்தின் முன்கூட்டிய, அதாவது 14-12-2023 தேதியிட்ட அறிலிப்பின் அடிப்படையிலும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது, தி.மு.க. அரசின் செயலற்ற தன்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு
தி.மு.க. அரசின் மோசமான செயல்பாட்டில் மக்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ள நிலையில், மக்களின் கோபத்தினை மூடி மறைக்கும் வகையில், சரியான தருணத்தில் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடவில்லை என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.” எனத் தெரிவித்துள்ளார்.