ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது இளைய மகளுடைய திருமண அழைப்பிதழை 2000 ரூபாய் (2000 rupees) நோட்டை போன்று வித்தியாசமாக அச்சடித்து வழங்கிய சம்பவம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே, பாஸ்போர்ட் வடிவிலான திருமண அழைப்பிதழ், ரேஷன் அட்டை போன்று திருமண பத்திரிகைகள் என வித்யாசமான முறையில் திருமண பத்திரிக்கைகளை அச்சிடும் முறை வழக்கத்தில் உள்ளது.
மேலும், சமீபத்தில் கூட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரி ஜோடி தங்களது திருமண பத்திரிக்கையை மாத்திரை அட்டை போன்று அச்சிட்டு வழங்கிய நிலையில், அது வைரலானது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தற்போது ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற வியாபாரியின் இளைய மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் தனது மகளின் திருமண அழைப்பிதழை
2000 ரூபாய் நோட்டு வடிவில் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அந்த 2000 நோட்டு (2000 rupees) வடிவிலான பத்திரிகையில் மணமகள்-மணமகனின் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்து உள்ளார். மேலும், பத்திரிகையின் பின்புறம் திருமணம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவர்கள் வழங்கிய போது 2000 ரூபாய் நோட்டை அவர்களுக்கு வழங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வெங்கடேஷ் ஏற்கனவே தனது மூத்த மகளின் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், திருமண அழைப்பிதழை இப்படி வித்தியாசமாக வழங்கிய வெங்கடேஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.