ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின.
பொதுவாக இந்தவகை பைலட் திமிங்கலங்கள் ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக நீந்திச் செல்லும் பழக்கம் உடையவை. டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை இவை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று உயிரிழந்தது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் கடற்கரை பகுதியில் காணப்பட்ட இந்த திமிங்கல குழு மாலையில் திடீரென கரை ஒதுங்க தொடங்கியது. அதையடுத்து, உடனடியாக மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை, கரை ஒதுங்கும் திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது.
அந்த குழுவின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி இந்த சம்பவம் குறித்து கூறுகையில், ” கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் இதுவரை 51 திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உயிருடன் உள்ளன.
அவற்றை மீண்டும் கடலுக்குள் விட்டுவிட்டு, ஆழமான பகுதிகளுக்கு நீந்திச் செல்ல வைப்பது தான் எங்களது நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்” என கூறினார்.
மேலும், அந்த குழுவில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கடல் விலங்கின நிபுணர்களும் உள்ளனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் உதவ முன்வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் சேர்ந்து கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர். தொடர்ந்து இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்குமா எனவும் வனவிலங்கு நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.