திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
நேற்று முதல் நாள் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணி முதல் ஒன்றரை மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும், ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் நிலை என்ன என்பது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முதல் நாளான நேற்று நகராட்சி, நீர் வளம், மின் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாளான இன்று நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார். இதில் அனைத்து துறை செயலர்களும், துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து வீடியோ தொகுப்பு மூலம் விளக்க உள்ளனர்.