தமிழ்நாடு சட்டபேரவை கூட்டதொடரில் தமிழ்நாட்டை தமிழகம் என்று குறிப்பிட்ட ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், சர்ச்சையானது.இதனை தொடர்ந்து 17 நாட்கள் கழித்து சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநரை நேருக்கு நேர் சந்தித்து நேரில் முதலமைச்சர் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து குடியரசு தினத்தன்று அரசு பிரதிநிதிகள், தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்தளிப்பது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தேநீர் விருந்தைப் புறக்கணிக்கப் போவதாக திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற தோழமை கட்சிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார்.
இந்த நிலையில்,நேற்று முன் தினம் நடந்த ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தன. எனினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக அமைச்சர்களும் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் வரவேற்ற ஆளுநர்,பிறகு கண்டுகொள்ளாமல் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பேசி கொண்டிருந்தார். மேலும் முதலமைச்சரை காக்க வைத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்து திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் “ஆக்கப்பூர்வமான அரசின் செயல்பாடுகள் தேக்கநிலை அடைய வேண்டும் என்பதற்கு ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை. முதல்வரும், மற்றெல்லாப் பிரச்சினைகளிலும் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய மென்மையான அணுகுமுறையையே குடியரசு நாளையொட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.