லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி விஷ ஊசி போட்டு வாகன ஓட்டி கொலை சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் சித்தகனி பகுதியை சேர்ந்தவர் சேக் ஜமால் இவரது மனைவி இமாம் பீவி இவர்களது இரு மகள்களும் திருமணமாகி வேறு வேறு ஊர்களில் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகளின் வீட்டிற்கு சென்ற ஜமாலின் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய இளைஞர், விஷ ஊசி செலுத்தி ஜமாலை கொலை செய்து பைக்கை களாவடிச்சென்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கம்மம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்
சம்பவத்தன்று விஷ ஊசியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய ஜமால், செல்போன் மூலம் தனது மனைவி இமாம் பீவியிடம், விஷ ஊசி போடப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
எந்த வித பதற்றமும் கொள்ளாத அவரோ, ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தனது மகள் குடும்பத்தில் எவரிடமும் அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இமாம் பீவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, இமாம் பீவியை கணவர் அழைத்ததற்கு பின்னர் மோகன் ராம் என்பவருடன் தொடர்பு கொண்டு பேசியதை வைத்து அவரை பிடித்து விசாரித்த போது விஷ ஊசி கொலையின் மொத்த பின்னணியும் அம்பலமானது
46 வயது இமாம் பீவியும், ஆட்டோ ஓட்டுனர் மோகன் ராமும் விபரீத காதல் இருந்துள்ளது காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக எண்ணி அவரை போலீஸ் பிடியில் சிக்காமல் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
அதன் படி தூங்கும் போது விஷ ஊசி போட்டுக் கொலை செய்வது என முடிவு செய்து இமாம் பீவியிடம் மோகன்ராம் விஷ ஊசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான். 40 நாட்களாக முயன்றும் கணவனுக்கு விஷ ஊசியை செலுத்த இயலாமல் தவித்து வந்துள்ளார் இமாம் பீவி.
இதையடுத்து சம்பவத்தன்று கிராமத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் சென்று இருந்து கொண்ட இமாம் பீவி, கணவரை அங்கு பைக்கில் வர வைக்கிறேன், வழியில் அவரிடம் லிப்ட் கேட்டு ஏறி விஷ ஊசியை செலுத்தி கொன்று விடுங்கள் என்றும் போலீசிடம் பாம்பு கடித்து இறந்து விட்டதாக கூறிவிடலாம் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் .
அதன் படி மோகன் ராவ், கூட்டாளிகள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகியோர் ஆளுக்கொரு விஷ ஊசியுடன் வழிக்கு ஒரு இடத்தில் லிப்ட் கேட்பதற்கு தயாராக நின்றுள்ளனர்.
மோகன்ராமையும், வெங்கண்ணாவும் வழியில் லிப்ட் கேட்ட போது ஏற்றாமல் சென்ற ஜமால் 3 வதாக வெங்கடேஷ் லிப்ட் கேட்ட போது நிறுத்தி தனது வண்டியில் ஏற்றிச்சென்றுள்ளார்.
வாகனம் புறப்பட்ட சில வினாடிகளில் விஷ ஊசியை ஜமாலின் இடுப்பில் குத்தி விட்டு அவரது இருசக்கர வாகனத்தை எடுத்து சிறிது தூரம் தள்ளி போட்டு விட்டு வெங்கடேஷ் தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இந்த விஷ ஊசி கொலை சம்பவம் தொடர்பாக இமாம் பீவி, மோகன் ராம் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய விஷ ஊசிகளை கைப்பற்றி உள்ளனர்.