அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பூஜைகளில் மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி அனுமதிக்க முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் புனித நகரில் ஒன்றான அயோத்தி உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில் ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வந்தது. தற்போது ராமர் கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன.
இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் கர்ப்பகிரஹத்தில் (கருவறை) ராமர் சிலை வைக்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். கருவறையில் வைக்கப்படும் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வந்து பூஜை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்ய பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மனைவியை கைவிட்ட மோடி பூஜை செய்வதா? என கேள்வி எழுப்பி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்டவர். அப்படிப்பட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோயில் பூஜைக்கு அனுமதிக்கலாம்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் பூஜையில், பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.