கான்பூரில், கணவர் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் ஏற்பட்ட சண்டையில், கணவரின் முகத்தில் பெண் ஒருவர் ஆசிட் (throws acid) வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கூப்பர்கஞ்ச் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக கணவருடன் சண்டையிட்ட பெண் ஒருவர் ஆத்திரத்தில், தனது கணவரின் முகத்தில் ஆசிட் வீசினார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட டப்பு என்ற நபர் உர்சலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து கலெக்டர் கஞ்ச் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த புகாரின் அறிக்கையில், “டப்புவிடம் அவரது மனைவி பூனம், நீங்கள் ஏன் வீட்டிற்கு தாமதமாக வந்தீர்கள் என்று கேட்டபோது, அவர் கோபமடைந்து சண்டையிடத் தொடங்கிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
அப்போது, ஆத்திரத்தில் அவரது மனைவி பூனம் கழிவறையிலிருந்து இருந்த ஆசிட்டை எடுத்து டப்புவின் மீது வீசியுள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல் அவர் அலறிய சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள உர்சலா மருத்துவமனையில் அனுமதித்தனர்” எனவும் கூறப்பட்டுள்ளது.-=
மேலும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரின் மனைவி பூனம் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.