காரைக்காலில் தனது மகளைவிட நன்றாக படிக்கிறான் என்பதற்காக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவியின் தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்த பெண் கொடுத்த வாக்குமூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால்,நேரு நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மாணவனுடன் ஒரு விக்டோரியா என்ற பெண்ணின் மகளும் படித்து வந்துள்ளார். மாணவனை விட தான் குறைவான மதிப்பெண் எடுத்து வருவதை அடிக்கடி தனது தாயிடம் சொல்லி மாணவி ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இதையெல்லாம் மனதில் பதியவைத்திருந்த தாய், குளிர்பானத்தில் விஷம் கலந்து, பள்ளி செக்யூரிட்டியிடம் கொடுத்து அந்த மாணவனிடம் கொடுக்கச் சொல்லியுள்ளார். செக்யூரிட்டியும், அந்த மாணவனின் பெற்றோர் என நினைத்துக்கொண்டு, அந்த குளிர்பானத்தை வாங்கி சென்று மாணவனிடம் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று பள்ளியின் ஆண்டுவிழா அன்று மதியமே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
குளிர்பானத்தை மாணவன் வாங்கி குடித்துள்ளான். பிறகு வீட்டிற்கு திரும்பிய மாணவன் வாந்தி எடுத்துள்ளான். எதுவும் சாப்பிட்டது ஜீரணிக்காமல் வாந்தி எடுக்கிறான் என நினைத்து, பெற்றோர்கள் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மாணவன் சிறிது நேரத்தில் மீண்டும் வாந்தி எடுக்கவே, சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவனுக்கு எப்படி விஷம் கிடைத்தது? எதனால் குடித்தான் என குழம்பினர். பிறகு விசாரணையை தொடங்கிய போலீசார், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிக்கொண்டுவந்தனர். முதலில், குளிர்பானத்தை யார் கொடுத்தது என விசாரித்தனர். அப்போது, பள்ளியின் செக்யூரிட்டி கொடுத்தது தெரியவந்தது. செக்யூரிட்டியை பிடித்து விசாரித்ததில், மாணவனின் பெற்றோர் கொடுத்ததாக தெரிவித்தார்.
ஆனால் மாணவனின் பெற்றோரை செக்யூரிட்டியிடம் காட்டி, விசாரித்ததில், இவர்கள் இல்லை ஆனால், மாணவனின் பெற்றோர் என கூறி ஒரு பெண் கொடுத்ததாக கூறினார். இதனையடுத்து விஷம் அருந்தி சிகிச்சை பெற்றுவந்த மாணவனிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, ஒரு மாணவி தன்னை விட குறைவான மதிப்பெண் எடுக்கிறாள் என பல நேரங்களில் பொறாமை படுவாள் என கூறியுள்ளார்.
அப்போது, இதனையடுத்து, இதையெல்லாம் மனதில் பதியவைத்திருந்த தாய்,அந்த மாணவியின் தாயை விசாரணை செய்து கேட்டதில் முதலில் இல்லவே இல்லை என அடித்து சொன்னார். பிறகு சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போலீசார், மாணவியின் தாய் விக்டோரியா இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சகாயராணியை காரைக்கால் நகர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பேதி மருந்து மட்டும் கொடுத்து மாணவனை கொலை செய்ததாக ஏற்கனவே சகாயராணி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தற்போது கடையில் எலி பேஸ்ட் வாங்கி மாணவன் பாலமணிகண்டனை கொன்றதாக சகாயராணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொதுநலன் கருதி:
பொதுவாக தன்னுடைய பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரத்தனமாக வரவேண்டும்.நன்கு படிக்கவேண்டும் என்கிற எண்ணம் எல்லா பெற்றோர்களுக்கும் இருப்பது இயல்பானது தான். ஆனால் அதற்கென வரைமுறை இருக்கிறது. படிப்பு மட்டும் தான் பிள்ளைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என எண்ணி, அவர்களுக்கு அளவுக்கு எஞ்சிய அழுத்தங்களை கொடுப்பதால் பிள்ளைகள் ஒரு கட்டத்திற்கு மேல் கடும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.
தேர்வுகளை தனது இறுதி வாழ்க்கை என நினைத்து பல பள்ளி மாணவர்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கிறன்றனர். இப்படிப்பட்ட மனம் குன்றிய சமூகமாக பிராய்லர் கோழி வளர்ப்பை போல அவர்களின் மீது படிப்பை செலுத்தாதீர்கள்.. ஒவ்வொருவருக்கும் தனித் திறமைகள் இருக்கும் அந்த திறமைகளை கண்டு கொண்டு அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.. அவர்களுடைய கஷ்டங்களை புரிந்து அதற்கான தீர்வுகளை நிதானமாக எதிர்கொள்ள அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.. அப்போது தான் ஆரோக்யமான, பரந்துவிரிந்த சந்ததிகளை உருவாக்கமுடியும்…