Worms In Aavin Milk : நீலகிரியில் தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் மிதக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் மிதந்ததுள்ளது.
இன்று காலை (18.03.24) திங்கள் கிழமை ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில், கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி வந்து உள்ளார்.
அப்போது கடையில் தேநீர் போடுவதற்காக பால் பாக்கெட்டை பிரித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிதந்து பாத்திரத்தின் ஓரங்களில் ஊர்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதையடுத்து உடனடியாக இந்த தகவலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் பாலில் உள்ள புழுக்கள் Worms In Aavin Milk பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
அந்த சோதனையின் பொழுது கடைக்காரர் வாங்கி வந்த ஆரஞ்சு நிற பிரீமியம் ஆவின் பால் பாக்கெட், இன்றைய தேதியில் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
சோதனைக்கு பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் ,
“இந்த நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த பேட்ஜ் எண் கொண்ட இன்றைக்கு சப்ளை செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும்,
குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட இந்த ஆவின் பால் பாக்கெட்களை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டாம் என ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
மேலும் இது குறித்து விரைந்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும்,” என்றும் கூறியுள்ளார்.
தினமும் மிக அதிகமான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.