தூத்துக்குடியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உயிரிழந்த பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வசந்தகுமார் என்பவரின் 33 வயதான மகன் மாரிச்செல்வம் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாரிச்செல்வமும், திருவிக நகரைச் சேர்ந்த பால் வியாபாரியான முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
காதல் ஜோடி இருவரும் ஒரே சமூத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், கார்த்திகாவின் குடும்பத்தினர் வசதி படைத்தவர்களாக இருந்த நிலையில், இவர்களின் காதலுக்கு கார்த்திகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, தேவர் ஜெயந்தி அன்று திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில்,
திருமணத்திற்குப் பிறகு மாரிச்செல்வத்தின் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வம் வீட்டுக்கு வந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, நேற்று 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மாரிச்செல்வம்-கார்த்திகாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, காவல் துறையினர் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை இன்று அதிரடியாக கைது செய்தனர்.