78 வயதான முதியவர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக காதலுக்கு வயது முக்கியமில்லை என பலர் சொல்லி கேட்டிருப்போம். அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தாத்தா இதனை உலகிற்கு மீண்டும் நிரூபித்திருக்கிறார். இவர் 18 வயதான தன்னுடைய காதலியை உறவினர்கள் முன்னிலையில் கரம்பிடித்திருக்கிறார். இது உள்ளூர் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகேயன் மாகாணத்தை சேர்ந்தவர் ரஷீத் மங்காக்கோப் (Rashed Mangacop). இவருக்கு தற்போது 78 வயதாகிறது. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார். அப்போது, அவருக்கு அறிமுகமாகியுள்ளார் ஹலீமா அப்துல்லா. அப்போது இருவரும் நண்பர்களாகி உள்ளனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து வீட்டினரிடம் இருவருமே தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயமும் இருக்கிறது ரஷீத்திற்கு இது முதல் திருமணம் தானாம். ஆம். தனக்கு விருப்பமான பெண்ணுக்காக அவர் 78 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தற்போது அந்த காத்திருப்பு முடிவிற்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய அவரது உறவினர் பென் மங்காக்கோப் (Ben Mangacop),” ரஷீத் என்னுடைய தந்தையின் சகோதரர். அவர் இதுவரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், ஹலீமாவை தற்போது திருமணம் செய்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இரு அவர்களது காதலினால் சாத்தியமாகியுள்ளது” என்றார்.
மணப்பெண் ஹலீமாவின் தந்தை ரஷீத்தின் குடும்பத்தில் வேலைபார்த்து வந்திருக்கிறார். இதனால் இருவரது காதலை இருதரப்பும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொண்டதாக பென் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் புதுமண தம்பதியர் கார்மன் நகரில் உள்ள வீட்டில் வசித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டப்படி, 21 வயதிற்கு குறைவான வயதுடையவர் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்றால் பெற்றோர்களின் சம்மதம் அவசியம். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றிருப்பதால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் பென் தெரிவித்திருக்கிறார்.