சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி (26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த நந்தினி குமாரி (22) என்பவரைக் காதலித்து வந்துள்ளார் .
இவர்களின் காதலுக்கு நந்தினி குமாரியின் அண்ணன்கள் தனபால் , பாலமுருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் . கார்த்திக் பாண்டியும் நந்தினி குமாரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இதனால் கடும் கோபத்தில் இருந்து வந்த நந்தியின் அண்ணன்கள் கார்த்திக் பாண்டியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காத்திருந்துள்ளனர்.
Also Read : பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லை – அபராதம் போட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்..!!
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் நந்தினி குமாரியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் பாண்டி அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்து காத்திருந்துள்ளார் . அப்போது அங்கு பைக்கில் வந்த பாலமுருகன் தனபால் , அவரது நண்பர் சிவா ஆகியோர் கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் பாண்டி சம்பவ இடத்தியிலே துடிதுடித்து இறந்தார் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த பாலமுருகன், தனபால் , சிவா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .