சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான “அனிமல்” படம் பேன் இந்தியா லிஸ்ட்டில், கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. படம் வெளியான நாளிலிருந்தே சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்படம், தற்போது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. படத்தைப்பற்றி தற்போதுவரை புதுப்புது சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் எழுந்து வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தற்போது பலரும் கவனிக்கத் தவறிய இன்னொரு பிரச்சினை படத்தில் உள்ளது என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க : கோயம்பேட்டில் லுலு மார்க்கெட்? 2024-ன் சிறந்த நகைச்சுவை – சேகர்பாபு!
படத்தை பற்றி தற்போது ஒருவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“படத்தில் உள்ள பெண்ணடிமைக் காட்சிகளைப் பற்றி பலர் விமர்சித்து இருந்தனர். ஆனால், பலரும் கவனிக்கத் தவறிய இன்னொரு பிரச்சினை படம் முழுக்க விரவி உள்ள இந்துத்துவம் இசுலாமிய வெறுப்பு.
நாயகனின் நிறுவனத்தின் பெயர் இந்து மதக் குறியீடான சுவஸ்திக். கிட்டத்தட்ட நாசிப் படை போலவே நாயகன் சூளுரைக்கிறார்.
நாயகனின் பங்காளியான வில்லன் தேவையே இல்லாமல் இசுலாமிய சமயத்தைத் தழுவியவராக வருகிறார். அதற்கான ஒரே காரணமாக இசுலாமியர்கள் பல பெண்களைத் திருமணம் செய்யலாம் என்பதாகக் காட்டப்படுகிறது.
இந்து நாயகன் மனைவி மீது காதலாக உருகி ஊற்ற, இந்து மனைவிகள் பத்தினித் தெய்வங்களாகக் காட்டப்பட,
இசுலாமிய வில்லனின் மனைவிகளாக வருபவர்கள் புகை பிடிப்பவர்கள், காம வெறி பிடித்தவர்கள், வசதிக்குத் திருமணம் செய்து கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : குரூப்-4 போட்டித் தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
இந்து சாமியார் கோ மூத்திரம் கொடுத்தால் கேள்வி இல்லாமல் குடிப்பவர், சர்ச் பாதரிடம் மட்டும் பகுத்தறிவு, தன்மானம் எல்லாம் பேசுகிறார்.
வன்முறை, பாலுணர்வைத் தூண்டி வசூல் அறுவடை செய்தது போலவே, இந்துத்துவ வடக்கர்களின் இசுலாமிய வெறுப்பணர்வைத் தூண்டி விட்டு கல்லா கட்டியிருக்கும் மிகவும் ஆபத்தான படம் தான் அனிமல்” என்று விமர்சித்துள்ளார்.