உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழல்..
தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நேரடியாக நடத்தத் துடிப்பதன் பின்னணியில்,
ஊழல் சதி இருக்குமோ? (உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழல்) என்ற ஐயம் எழுகிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றுக்கு 682 உதவிப் பொறியாளர்கள், 24 இளநிலைப் பொறியாளர்கள், 257 தொழில்நுட்ப உதவியாளர்கள், 367 பணி ஆய்வாளர்கள்,
244 துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1933 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குனர்,
பேரூராட்சிகளின் இயக்குனர், குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுகள் அகற்றும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு நேர்காணல் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை மூலம் நடத்தப்படும் பருவத் தேர்வுகளின் மதிப்பீடுகள் குறித்தே பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில்,
நகராட்சி நிர்வாகத்துறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணிவழங்கவும், தங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு பணி வழங்கவும் தான் அந்தத் துறையே நேரடியாக ஆள்தேர்வு நடத்துகிறது என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கமுடியாது.
உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது. ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான்,
அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது.
ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே தேர்வு செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன.
தமிழக அரசுத் துறைகளுக்கு 1933 பேர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை நேர்மையாக நடைபெற்றால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.
அவர்களின் வறுமை தீரும். இந்த பணி நியமனங்களில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. எனவே, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 1933 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க அத்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இந்தப் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்டு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.