தமிழகத்தின் கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும், திமுக எப்போதும் வெறுப்பையே உமிழ்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில்,பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:கன்னியாகுமரி மாவட்டம் எப்போதும் பாஜகவுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து வருவதாகப் பெருமிதம் பிரதமர் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் திமுக கூட்டணியால் கிடப்பில் போடப்பட்டிருந்த கன்னியாகுமரி நரிக்குளம் பாலம், கன்னியாகுமரி திருவனந்தபுரம் நான்கு
வழிச்சாலை, மார்த்தாண்டம் பார்வதிபுரம் பாலம், என அனைத்து நலத்திட்டங்களும், பாஜக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன.இரட்டை ரயில் இருப்புப்பாதைப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் பிரதமரின் ‘Road show’-க்கு அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்!
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில், சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவுபெற்றிருப்பதையும், சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்ட பிரதமர்,
காங்கிரஸ் ஆட்சியில், 800 கோடி ரூபாய்க்கான ரயில்வே திட்டங்கள் கூட தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்றும், தற்போது பாஜக ஆட்சியில், 6,300 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,திமுக காங்கிரஸ் கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள், பாஜகவால்தான் மீண்டும் அனுமதிக்கப்பட்டன.
தமிழகப் பாரம்பரியத்துக்கும், இந்தியக் கலாச்சாரத்துக்கும் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் எந்த ஆபத்தும் வர அனுமதிக்க மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
புதிய பாராளுமன்றத்தில் தமிழர்களின் பெருமையான செங்கோலைக் கூட, திமுக புறக்கணித்ததை நினைவுகூர்ந்தார்.
மேலும் திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி என்று கடுமையாகக் குற்றம் சாட்டிய பிரதமர், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பொதுமக்கள் நேரலையில் காண திமுக தடை விதித்ததையும், உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகே, திமுக நேரலை ஒளிபரப்பை அனுமதித்ததுஎன்று தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழக மக்களின், அன்பும் ஆதரவும், ஆசிகளும், தமக்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே பலம் கொடுக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருந்தது என்று குற்றம் சாட்டிய பிரதமர்,
இலங்கை அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவ சகோதரர்களை மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இத்தனை ஆண்டுகளாக இந்த நிலைக்கு மூல காரணம் திமுக காங்கிரஸ் கட்சிகள் என்பதைத் தெளிவுபடுத்தினார். திமுகவும், காங்கிரஸ் கட்சியும், இத்தனை ஆண்டுகளாகச் செய்த தங்கள் பாவங்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.