பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் செய்யப்பட்ட ஒரு மேளமாகும். தமிழினத்தின் தொன்மையான அடையாளமான பறை, தோலிசைக் கருவிகளின் தாய் என்று அழைக்கப்படுகிறது. பறை என்ற சொல் “பேசு” என்ற பொருளை குறிக்கின்றது. அதனால் பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி என்பதால் ‘பறை’ என்று அழைக்கபடுகிறது. பன்நெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து.
தமிழினத்தின் தொன்மையான அடையாளமான பறை உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியமாகவும், தமிழர் வாழ்வியலின் முகமாகவும், கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாகவும் முக்கியம் பெற்றது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் ‘பறை’ பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. ‘பறை’ என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.
பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தி ஊடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் “பறைதல்” என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் “பறையர்” என்பதும் காரணப் பெயர்களாகும்.
காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் தூயத் தமிழ் சொற்கள் தொழில் நிலையை குறிக்கும் பெயராக மாற்றம் பெற்றுள்ளன.
அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை சொல்பவர் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் உரத்த குரலில் சத்தமிட்டே செய்திகளை அறிவிக்க வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றைய சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ள முடியும்.
அத்துடன் உரத்தக் குரலில் சத்தமாகப் தகவல்களை சொல்பவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, அதன் மூலம், தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் சொல்வார்கள். அவ்வாறு தவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பயன்படுத்திய கருவி தான் பறை இசைக்கருவி
இதனால் காலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.
பறை ஆட்டம்
பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கதகவும் எழுச்சி மிகுந்ததகவும் அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.
ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தியை தன்னகத்தே கொண்டது பறையிசை.
பறையிசையின் பயன்பாடு
ஆதி மனிதர் சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் பறையை பயன்படுத்தினார்கள்
போருக்கு வீரர்களை அணிதிரட்டுவதற்கும் (போர்க்கெழுமாறு,) வெற்றி தோல்வியை அறிவிக்கவும் மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் பறை பயன்படுகிறது. மேலும் வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்கவும் இயற்கை வழிபாடுகள் கூத்துகளில், விழாக்களில், மற்றும் மரண நிகழ்வுகளிலும் பறை இசை பயன்படுத்தப்பட்டது.
ஆனால் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற நவீன கருவிகளின் வருகையினால் பறையின் பயன்பாடுகள் பிற்காலத்தில் குறையத் தொடங்கின. இதன் காரணமாக பறை இசையின் பெருமைகள் இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும்பாலும் அறியமுடியாத ஒரு நிலையில் இருந்து வந்தது. ஒரு காலத்தில் மிகவும் மருகியிருந்த பறையிசை மீண்டும் இந்தியா இலங்கை மட்டுமின்றி மேலை நாடுகளிலும் இசைக்க தொடக்கியுள்ளது.