காலநிலை மாற்றத்தினால் புவி வெப்பமயமாதல் உயர்வடைந்து வருகிறது. இதன் காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
மேலும் பருவநிலை மாற்றத்தால் இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதமும் அதிகரித்துள்ளதோடு கடல்நீர் மட்டம் உயர்தல், வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிப்பு, பஞ்சம் மற்றும் வறட்சி ஏற்படுதல் உள்ளிட்டவை ஏற்பட உள்ளதாக ஐபிசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிசிசி அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
அதன்படி 2100ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் உள்ள இந்தியாவின் சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, தூத்துக்குடி, கொச்சின் உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் கடலுக்கடியில் 2.7 மீட்டர் அளவு வரை ஆழத்தில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலநிலை மாற்றம் தொடர்பான சிக்கலை தீர்க்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ள நாசா, சூற்றுச்சூழலில் மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள மோசமான நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க உள்ளதாகவும் ஐபிசிசி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.