அங்கீகாரமின்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கடன் நடவடிக்கைகளை தடை செய்யும் மசோதா குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், கடன் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, ‘பியுலா’ எனப்படும் ஒழுங்கற்ற கடன் நடவடிக்கைகளை தடை செய்தல் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த மசோதா தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிக்குள் அனுப்பலாம் என கால அவகாசம் நிர்ணயித்துள்ளது.
Also Read : வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – ஆந்திராவில் நடந்த பகீர் சம்பவம்..!!
வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: ரிசர்வ் வங்கி அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத நபரோ அல்லது நிறுவனமோ, பொது கடன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இந்த மசோதா தடை செய்கிறது. உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனி நபர் அல்லது நிதி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேசமயம், அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 2 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
டிஜிட்டல் முறையிலோ அல்லது வேறு வழியிலோ பணத்தை கடனாக கொடுத்து, கடன் வாங்குபவர்களை துன்புறுத்தினாலோ அல்லது கடன்களை மீட்க சட்டவிரோத வழிகளை பயன்படுத்தினாலோ, மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கடன் வழங்குபவர், கடன் வாங்குபவர் அல்லது அது தொடர்பான சொத்து ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலோ அல்லது நம் நாட்டிற்கு வெளியே அமைந்திருந்தாலோ, அது தொடர்பான விசாரணை சி.பி.ஐ., அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.