சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான்.
சத்தீஸ்கா் மாநிலம் ஜஞ்சீா் சம்பா மாவட்டம் பிரீத் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் சாஹு என்ற 11 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை தவறி விழுந்தான். கிணற்றில் சுமாா் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது. பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர்.
அவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருந்தனா்.
முன்னதாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பிய மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் 104 மணி நேர மீட்புப் பணிக்குப் பின்னா், அந்தச் சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான். அவன் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலை சீராக இருப்பதாக பிலாஸ்பூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.