ஆனித் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்டுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், இந்த மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது