கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வரும் மகுடேஷ்வரன் – நிறைமதி தம்பதியினரின் 17 வயது மகள், கோவை ஆர்எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்ட மனைவியின் பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க முயன்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாணவி பயின்று வந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் அவரிடமிருந்து தப்பவே மாணவி பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டுவிட்டுள்ளதாகவும் சக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து காவல் துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மட்டும் இன்றி அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.