புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்டநெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மிரட்டலாக உருவான புஷ்பா 2 திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த 5 தேதி கோலாகலமாக வெளியானது.
இதில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் திரையிட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது .
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
Also Read : இனி எங்க வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது – புதிய மைல்கல்லை எட்டிய இஸ்ரோ..!!
இதற்கிடையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூபாய் 25 லட்சம் வழங்கி இருந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜாமினில் வெளிவரமுடியாத வகையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை மருத்துவமனைக்கு உடல்பரிசோதனைக்காக அழைத்துச்சென்று பின்னர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதித்து நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் தனக்கு எதிரான எப்ஐஆரை ரத்து செய்ய கோரி அல்லு அர்ஜூன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.