திமுக நிர்வாகிகள் 19 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 51 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று திமுக நிர்வாகிகள் 19 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தலைமை அறிவித்த வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்ட நிர்வாகிகள், கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவோர் என தற்போது 19 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.