கேரள மாநிலத்தில், புதிதாக பரவி வரும் நோரா வைரஸால் (norovirus) பள்ளி மாணவர்கள் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள காக்க நாட்டில் ஒரு தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சிலருக்கு திடீரென்று வாந்திபேதி ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுகாதாரத் துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில், சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் (norovirus) பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், பெற்றோர்களின் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து அவற்றை பொதுசுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அந்த ஆய்வின் முடிவில் 2 மாணவர்களுக்கு நோரா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது மாணவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நோரா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட அந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொச்சி பகுதியில் சுகாதார துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த நோரா வைரஸ் சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமாக பரவுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வீடுகளில் குளோரின் கலந்த நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் பழங்கள் காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக நன்கு கழுவி பயன்படுத்தவும் எனவும் மேலும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.