தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள சூழலில், இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று தரக்குறியீடு மோசமடைந்து வரும் நிலையில், தொடர்ந்து இன்று 5ஆவது நாளாக காற்று தரக்குறியீடு 346ஆக மோசமடைந்து உள்ளது.
இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், காற்று மாசு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் கட்டுமானம் மற்றும் கட்டுமானம் சார்ந்த இதர பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் BS III மற்றும் BS IV வகை வாகனங்கள் இயங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.