அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் சீன எல்லை அருகே மயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் சீன எல்லை அருகே மாயமானவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேச மாநிலம் அஞ்சௌ மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரிக்கி கம்சி கூறியதாவது:
இங்கு அஞ்சௌ மாவட்டத்தில் கோல்யான் பகுதி அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த படய்லம் டிக்ரோ, பைங்சோ மன்யு ஆகிய 2 இளைஞர்கள் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர்.அவர்களது உறவினர்கள் கூறியபடி, இருவரும் சீன எல்லையான சக்லகம் பகுதிக்கு மருத்துவச் செடிகளைக் கண்டுபிடிக்கச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன இருவரையும் பல மாதங்களாகத் தேடிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆகஸ்ட் 24 அன்று சீன எல்லையில் இருவரையும் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்.அவர்கள் தவறுதலாக சீனா சென்றிருக்கலாம் என நம்புகிறோம். இதுவரை நடந்த தேடுதல் நடவடிக்கையின் விவரங்களை மாநில அரசிடம் தெரிவிப்போம்.
இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவ மூலிகைகளைத் தேடி சீன எல்லையில் உள்ள காடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.