தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. 2,000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அதில் பணியாற்றியவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிலையில், அம்மா கிளினிக் மூடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
‘‘ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.’’ எனக் குறிபிட்டுள்ளார்.