தமிழக கேரளா எல்லையில் அரிக்கொம்பன் என்று கிராம மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த நான்கு மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம் பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்துள்ள அந்த காட்டு யானை விவசாய நிலங்களுக்கு தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அரிக் கொம்பனின் நடமாட்டத்தால் அது சுற்றி வரும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் எட்டு பேரைக் கொன்றதாகவும் ஏராளமான விளைநிலங்களை நாசம் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கேரளா வனத்துறையினரால் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட இந்த யானை பின்னர் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வேத கானம் வனப்பகுதியில் விடப்பட்டது.
காட்டில் விடுவதற்கு முன் அதன் கழுத்தில் ரேடியோ காலர் என்ற கருவியுடன் கூடிய பட்டை பொருத்தப்பட்டது. இதன் மூலம் அரிக்கும்பனின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். முதலில் மங்களதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்த அரிக்கும்பன் யானை பின்னர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் புகுந்தது.
கம்பத்திலிருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கம்பம் தேனிக்குள் ஊருக்குள் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்த அந்த யானையால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
வீதிகளில் சுற்றி தெரியும் அரிக்கொம்பனின் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்து இணையதளங்களில் பதிவிட்டனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு இருந்தும் சிலர் அந்த யானையை பின் தொடர்வது தெரிய வந்ததால், அரிக்கொம்பனை யாரும் படம் பிடிக்க வேண்டாம் என்றும், அதன் எதிரே வரவேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்தனர்.
ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கும் அரிக்கொம்பனை பிடிக்க வனத்துறையினரும் தொடர்ந்து பின் தொடர்ந்து வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் அரிக்கொம்பனை பிடிக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மூன்று கும்கி யானைகள் வர வைக்கப்பட்டுள்ளன. யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 வனத்துறையினரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அரிக்கொம்பன் சுருளிப்பட்டியானை கஜம் வனப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அரிக்கொம்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.