குஜராத் நிறுவனம் தயாரித்து வழங்கிய கண் சொட்டு மருந்துகளை (eye drops) பயன்படுத்திய, 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு, இந்திய அரசங்கத்திடம் புகார் அளித்துள்ளது.
குஜராத்தில் செயல்பட்டு வரும் ‘இந்தியானா ஆப்தால்மிக்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வழங்கிய கண் சொட்டு மருந்துகளால் (eye drops), 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது.
அந்த புகாரின் பேரில், இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, பார்மெக்சில் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக பார்மெக்சில் நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பானது குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளது.
இந்த விவகாரத்தினால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, கண் சொட்டு மருந்து தயாரிப்பை இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுத்த வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.