தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வரும் 14 ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் பண்டிகையான 16ம் தேதி மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகளுடன், 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நேற்றிரவு அறிவித்தது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 7ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரவு 10:00 முதல் காலை 5:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு; இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வரும் 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், வரும் 14 முதல் 18ம் தேதி வரை, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு,பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் நலன் கருதி, பஸ்களில் அமைக்கப்பட்ட இருக்கைகளில், 75 சதவீதம் மட்டும் பயணியர் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.