சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகி உள்ள நிலையில், பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சிவகாசி மாவட்டம் எம்.புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில், 6 அறைகள் வெடிவிபத்தில் தரை மட்டமாகியுள்ளன. மேலும் பட்டாசு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த 4 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து என தகவல் வெளியாகி உள்ளது.பட்டாசு மூலப்பொருட்கள் கலக்கும் போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.