காசா நகரில் 50, ஆயிரம் கர்ப்பிணிகள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களின் தாயகத்தை பிரித்து உருவாக்கப்பட்டது தான் இஸ்ரேல். தனிநாடு உருவாக்கப்பட்ட இஸ்ரேல், காலப்போக்கில் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் சொந்தமாகியது.
இதனால் பாலஸ்தீனர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு, காசா மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு பிணைக்கைதி கொல்லப்படுவார் என்று கூறியிருக்கிறது.
இதையடுத்து பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவிற்கு மின்சாரம் வழங்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் காசா நகரில் 50, ஆயிரம் கர்ப்பிணிகள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரில் 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, குடிநீர், சுகாதாரம் என அடிப்படை தேவையின்றி தவித்து வருகின்றனர். மிக மோசமான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற ஒரு மோசமான சூழலை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்ததில்லை என்று வேதனை தெரிவித்துள்ளது.
மேலும், காசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இது வரை 40 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். காசா நகரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.2,400 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.