சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள 7 தொகுதிகளில் ( naxalite ) மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளை அழிக்க மாநில சிறப்புத் தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் – காங்கர் மாவட்ட எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதை அடுத்து அந்த வனப்பகுதியில் நேற்று காலை மாநில சிறப்புத் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலிசார் வருவதைத் தெரிந்து கொண்ட அங்குப் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு நக்சலைட்டுகளுக்கு எதிராகச் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
Also Read : தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது..!!
நக்சலைட்டுகள் மற்றும் சிறப்புப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் 2 பெண்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் சிறப்புப் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு தற்போது அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மேலும் இவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாராயண்பூர் மாவட்ட ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது மோதலாகும், ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்த என்கவுண்டரில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு மட்டும் சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட என்கவுண்டர்களில் ( naxalite ) இதுவரை 88 நக்சலைட்டுகள் சத்தீஸ்கரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.